திருநெல்வேலி; சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் நெல்லை பல்கலைக்கழகம் இடத்தை பிடித்துள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் கே.பிச்சுமணி கூறியதாவது:


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இளநிலை மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு எம்.எஸ்.சி.,மற்றும் எம்.காம்.,வகுப்புகள் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டும் 5 ஆண்டு பாடப்பிரிவுகளில் கணிதம், இயற்பியல், வேதியியல், பயோடெக்னாலஜி, வணிகவியல், சுற்றுச்சூழல், கடல்சார் படிப்பு ஆகியவை நடத்தப்படுகின்றன. நடப்பு கல்விஆண்டில் புதிதாகஇளங்கலை நீர் வேளாண்மை தொழில்நுட்பம் என்ற மூன்றாண்டு பாடத்திட்டமும், லேப் டெக்னீசியன் என்ற ஓர் ஆண்டு பட்டய படிப்பும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த வகுப்புகளில் சேர முன்பு நுழைவுத்தேர்வு இருந்தது. தற்போது நுழைவுதேர்விற்கு பதிலாக கவுன்சிலிங் மட்டுமே மேற்கொள்கிறோம். இவற்றிற்கு ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் மதன் மோகன் மாளவியா தேசிய திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் பல்வேறு நிலைகளில் உள்ள 36 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புத்தாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக 11.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளது. இதில் 60 சதவீத நிதி உதவியை மத்திய அரசு வழங்குகிறது. 

நடப்பு கல்வியாண்டு முதல் நெல்லை பல்கலைக்கழகத்தில் 65 மாணவர்களை கொண்ட தேசிய மாணவர் படை என்.சி.சி.,யில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுதுறையின், தேசிய தரமேம்பாட்டு மையம் என்ஐஆர்எப் மேற்கொண்ட கணக்கெடுப்பில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 93 இடத்தை பிடித்துள்ளது. தற்போது ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்வதால் இன்னமும் முன்னேற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.